Thursday, October 27, 2005

பருவத்தால் அன்றிப் பழா !

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி

எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா.

- ஒளவையார் (மூதுரை)

பொருள்:
உருவத்தால் விரிந்து,நீண்ட உயரமான மரங்கள் யாவும், பழுக்க வேண்டிய காலத்தில் அல்லாமல் பிறகாலத்தில் பழுக்காது. அதுபோல விடாமல் முயற்சி செய்தாலும், கூடிவர வேண்டிய காலம் வந்தால் அன்றி, தொடங்கிய காரியங்கள் வெற்றி பெறாது.

அடுத்து-விடாது தொடர்ந்து, கருமங்கள்- காரியங்கள், தொடுத்த-விரிந்த, பருவத்தால்- பழுக்க வேண்டிய காலத்தில், பழா-பழுக்காது.

நீதி:
ஒரு செயலைத் தொடங்கும்முன் அதற்கு ஏற்ற காலம் அறிந்து தொடங்க வேண்டும்.

பிடித்திருந்தால் சொல்ல, நட்சத்திரங்களைச் சொடுக்கவும். Current rating is:

Wednesday, October 26, 2005

இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!


தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

- பாவேந்தர் பாரதிதாசன்

பிடித்திருந்தால் சொல்ல, நட்சத்திரங்களைச் சொடுக்கவும். Current rating is:

Saturday, July 30, 2005

அல்லா என்பார் சிலபேர்கள்...

அல்லா வென்பார் சிலபேர்கள் ;

       அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;

வல்லான் அவன்பர மண்டலத்தில்

       வாழும் தந்தை யென்பார்கள் ;

சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'

       என்றும் சிலபேர் சொல்வார்கள் ;

எல்லா மிப்படிப் பலபேசும்

       ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !


அந்தப் பொருளை நாம்நினைத்தே

       அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.

எந்தப் படியாய் எவர்அதனை

       எப்படித் தொழுதால் நமக்கென்ன ?

நிந்தை பிறரைப் பேசாமல்

       நினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;

       வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.


-நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை


மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அருமையான பாடல் இது. இதைவிட எளிமையாக, குழந்தைக்கும் புரியும் வகையில் மத நல்லிணக்கத்தை எடுத்துச் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான்.

//எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?//


"நச்"சென்று ஒரு கேள்விகேட்டு, மதசகிப்புத்தன்மையை வலியுறுத்துகிறார்.அது மட்டும் இருந்துவிட்டால் தான், இன்றைய இன்னல்களுக்கு இடமே இல்லையே.

//நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்//

என்று இரண்டே அடிகளில், அனைத்து மதங்களும் வலியுறுத்தும் அறநெறியை, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறார்.

"சூரியன் வருவது யாராலே?" என்ற பாடலின் ஒரு பகுதியாக வரும் இவ்வரிகளை, இறை வணக்கப் பாடலாகவும், சர்வமத வழிபாட்டுப் பாடலாகவும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.


பிடித்திருந்தால் சொல்ல, நட்சத்திரங்களைச் சொடுக்கவும். Current rating is: